ஓ.என்.வி. விருதுக்குழு வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட விருதை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்திருப்பது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த அவமானமாகும்.திட்டமிட்ட வன்மத்தோடு வைரமுத்துவை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இனத்தையே அவமானப்படுத்துகின்ற விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இச்சதிச்செயலை முறியடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்
வைரமுத்து எழுதிய நாட்படு தேறல் எனும் கவித்தொகுப்பின் ஆறாவது பாடலுக்காக கேரளாவின் இலக்கிய அமைப்பான ஓ.என்.வி விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, தற்போது அதுகுறித்து மறுபரிசீலனை செய்வதாக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. மலையாளி அல்லாத ஒருவருக்கு விருது வழங்கப்படுவது இதுவே முதன்முறையென அறிவித்துவிட்டு, பெருந்தமிழரான வைரமுத்துவைத் தற்போது திட்டமிட்டுத் தவிர்க்க முயல்வது மிகுந்த உள்நோக்கமுடையது. தமிழின் ஒப்பற்றப் பெருங்கவியான வைரமுத்துவை அவமதிக்கிற இச்செயல் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையே இழிவுபடுத்துவதாகும்.
காலம் கடந்து தழைக்கும் தன் தமிழால், சாகாவரம் பெற்ற செழுமையான தன் இலக்கியப் படைப்புகளால் பெருமைமிக்கத் தமிழ்த்தேசிய இனத்தின் கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழ்பவர் வைரமுத்து. தமிழ்மொழியின் வளமை செறிந்த தனது ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு அப்பால் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர், தண்ணீர் தேசம், சிகரங்களை நோக்கி, தமிழாற்றுப்படை எனப் பல இலக்கியப் பங்களிப்புகளைத் தமிழ் அறிவுலகிற்கு வழங்கிப் பெருமை சேர்க்கும் பெருந்தமிழர் வைரமுத்துக்கு நேரும் அவமதிப்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நீதிமன்றம் மூலம் எவர் மீதானக் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க, நிரூபிக்க எத்தனையோ வழிவகைகள், வாய்ப்புகள் சட்டத்தில் இருக்கிறபோதும், அவற்றை நாடி அதனைச் செய்யாது கடந்து, அமைதியாக இருந்துவிட்டு வைரமுத்து தனது படைப்புக்காக அங்கீகாரத்தைப் பெறும்போதெல்லாம் திட்டமிட்டு அவதூறு கிளப்பி அவரை அவமதிக்கும் வஞ்சகச்செயலை ஒருபோதும் ஏற்க முடியாது. வைரமுத்து ஒவ்வொரு முறையும் புகழ் உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவதூறுகள் மூலம் அவரைக் குணப்படுகொலை செய்ய முயல்வதையும், தாழ்த்த முற்படுவதையும் இனியும் அனுமதிக்க முடியாது. குற்றமென ஒன்றைக் கருதினால் அதனை நிரூபிக்கவோ, தனது தரப்பு நியாயத்தை உலகத்துக்கு எடுத்துரைத்து நிறுவவோ முற்படுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அதனைச் செய்யாது, ஊடகங்களில் வெறுமனே செய்தியாக்கி, அவரை இழிப்படுத்திக் களங்கம் கற்பிப்பதும், அதன்மூலம் வைரமுத்து அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அங்கீகாரத்தைத் தடுத்து நிறுத்துவதுமெனச் செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. விருதுக்கும், எதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதபோதும் இவற்றை நம்பி ஓ.என்.வி. விருதுக்குழு அவருக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட விருதை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்திருப்பது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த அவமானமாகும்.
தேசிய விருதுகள் உள்ளிட்ட பலநூறு விருதுகளைப் பெற்று, தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிற வைரமுத்துக்கு விருது வழங்கப்பட்டால், அவ்விருதுகளுக்குதான் பெருமையே ஒழிய, நிறைகுடமாய்த் ததும்பும் அவருக்கல்ல. திட்டமிட்ட வன்மத்தோடு வைரமுத்துவை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இனத்தையே அவமானப்படுத்துகிற இதுபோன்ற இழிசெயல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியவை மட்டுமல்லாது வன்மையாக எதிர்க்கப்பட வேண்டியவை. ஆகவே, தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு வைரமுத்துக்கு எதிராக நடக்கும் சதிச்செயலை முறியடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.