ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த 2012ஆம் ஆண்டில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தை நாகப்பட்டினத்தில் திறந்தது. இந்தப் பல்கலைக்கழகம் மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் உள்ளிட்ட படிப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. பொது நுழைவுத்தேர்வு மூலம் இதில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம் (தூத்துக்குடி), மீன்வள தொழில்நுட்ப கழகம் (பொன்னேரி), மீன்வள பொறியியல் கல்லூரி (நாகப்பட்டினம்), மீன்வள் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் (மாதவரம்), மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (தஞ்சாவூர், கன்னியாகுமரி) ஆகிய கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயர், தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.