டெங்கு, சிக்குன்குனியாவால் உயிரிழந்தோர் பட்டியல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் கடந்த ஆண்டு பல பேர் உயிரிழந்ததாகவும், இந்தாண்டும் கொசுக்களை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். கொசுக்களை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இந்தாண்டு மட்டும் 1 முதல் 12 வயதிற்குட்பட்ட 96 குழந்தைகள் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஏனென்றால் 3000-க்கும் அதிகமாக கொசு வகை இனங்கள் உள்ளன. ஆனால் கொசுக்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டெங்கு, சிக்குன்குனியாவால் உயிரிழந்தோர் குறித்து மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சுகாதார துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.