“நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” - நீதிமன்றம் கண்டனம்

“நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” - நீதிமன்றம் கண்டனம்
“நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” - நீதிமன்றம் கண்டனம்
Published on

தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் அதன் தலைமைப் பொறியாளர் ஆறுமுகம் பதில் மனுத் தாக்கல் செய்தார். அதில், பருவமழை பொய்த்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டுபோனதால், சென்னை நகருக்கு தண்ணீர் விநியோகிப்பது நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டரிலிருந்து 525 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீஞ்சூர், நெம்மேலியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் மூலம் நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டரும், வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டரும் சென்னைக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர, 900 தண்ணீர் லாரிகள் மூலம் நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 400 முறை தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும், தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க 212 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஆழ்துளை கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் ஏரி, குளங்களை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கை என்ன? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். 

கடைசி நேரத்தில் மழை நீர் சேமிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் என்ன பலன்? எனவும் கேட்டனர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு, ஒரு நாளைக்கு 270 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கும் வகையில் 270 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், சோழவரம் ஏரி 38 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தது. இதையடுத்து, நீர் மேலாண்மை, குடிநீர் தட்டுப்பாடு போக்கும் நடவடிக்கை தொடர்பான அரசாணைகளை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம், தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com