சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது
சேலம் 8 வழி பசுமைவழி சாலை திட்டம் சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் வழியே அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. வாதங்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 8 வழிச்சாலை வழக்குகளில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில் எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் ஆணை செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஜூன் 3ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது