தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது ஜூலை 1ம் தேதிமுதல் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 0 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ. 4.60-ல் இருந்த கட்டணம் ரூ.4.80 காசுகளாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் உயரும் மின் கட்டணத்தில்,
0 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 காசுகளாக உயர்வு.
401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15-ல் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்வு.
501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்வு.
601 முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20-ல் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்வு.
801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20-ல் இருந்து ரூ.10.70 காசுகளாக உயர்வு.
1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் ரூ.11.25-ல் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்வு.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கும் மின் கட்டண உயர்வுக்கு இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் கே.இ.ரகுநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கண்டனம் தெரிவித்திருக்கும் அவர், “2021 ஆம் ஆண்டு TNERC உத்தரவின்படி EB கட்டண உயர்வு வருடாந்திர அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநிலத்தில் MSME-கள் ஏற்கனவே போராடி மறைந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த உயர்வு எப்படியும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே பல கட்ட போராட்டங்களை சங்கங்கள் நிலையான கட்டணங்களை திரும்ப பெற கோரி அரசுக்கு மனு அளித்தும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாநில அரசால் இதற்கு தீர்வு காண முடியவில்லை. இந்த கட்டணம் அதிகரிப்பு சுமார் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 0.35 ஆக இருந்தாலும், சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படாது” என கூறியுள்ளார்.
இந்த மின் கட்டண உயர்வால் 6000 கோடி லாபத்தை எதிர்நோக்குகிறது என தமிழ்நாடு அரசை விமர்சித்திருக்கும் அன்புமணி ராமதாஸ், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு - தமிழக மக்களின் முதுகில் குத்தி விட்டது திமுக அரசு.
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.83% அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடிக்கும் கூடுதலான வருவாய் கிடைக்கும். தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது” என கடுமையாக எதிர்த்துள்ளார்.
மின் கட்டண உயர்வை எதிர்த்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மின் கட்டண உயர்வு என்பது மக்கள் விரோதமானது, மின் கட்டணம் உயர்வால் விலைவாசி அதிகரிக்கும், அடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்காக முயற்சி நடக்கும். மக்கள் விரோத போக்கை தான் திமுக அரசு கடைபிடிக்கிறது” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகமான டான்ஜெட்கோ அளித்துள்ள விளக்கத்தில், “2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர்களில், 1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
டான்ஜெட்கோ தனது எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ச்சியாக இதுதொடர்பான விளக்கங்களை பதிவிட்டு வருகிறது.