கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்து, தமிழகத்திற்கு இம்முறை 100 குப்பிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில், கொரோனா தொற்றுக்கு அடுத்ததாக, கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஆம்போடெரிசின்-பி மருந்தின் தேவையும் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே மே 21ஆம் தேதி, 23,680 ஆம்போடெரிசின்-பி குப்பிகள் மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 19,420 குப்பிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
இதில், தமிழகத்திற்கு மொத்தமாக 100 குப்பிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக குஜராத் மாநிலத்திற்கு 4,640 குப்பிகளும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 4,060 குப்பிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்டோருக்கும், மகாராஷ்டிராவில் 1000-க்கும் மேற்பட்டோருக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு உள்ளது.
கூடுதலாக 9 லட்சம் குப்பிகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.