“5 ஆண்டுகளில் பொற்கால ஆட்சியை திமுக அரசு தரும்“ - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

“5 ஆண்டுகளில் பொற்கால ஆட்சியை திமுக அரசு தரும்“ - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
“5 ஆண்டுகளில் பொற்கால ஆட்சியை திமுக அரசு தரும்“ - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Published on

இன்னும் 5 ஆண்டுகளில் யாரும் கனவு காண முடியாத பொற்கால ஆட்சியை திமுக அரசு தரும் என்று மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் திமுக சார்பில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் பொதுக்கூட்டத்தில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது “பல வகைகளில் இந்த அரசு முன்மாதிரியான அரசு என பலர் கூறியிருக்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி மற்றும் எதிர்கட்சி துணைத் தலைவர்கள், எங்கள் உரையின்போது குறுக்கிட்டு, நீங்கள் கொடுத்த பட்ஜெட்டில் சிறப்பு இல்லை என பல குறைகளை கூறியிருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் நான் அவர்களை கேட்கிற ஒரே கேள்வி, 2021 பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டை நீங்கள் சமர்ப்பித்தீர்கள். அப்போது, கொரோனா இரண்டாவது அலை தொடங்கும் என்றோ, பருவ மழை அதிகமாகப் பெய்யும் என்று யாரும் கணிக்க முடியாத சூழல் நிலவியது. ஆனால், கொரோனா மற்றும் மழைக்காலங்களில் நீங்கள் உருவாக்கிய பட்ஜெட்டை விட 10 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்து இவற்றிற்கு நாங்கள் முடிவு கண்டுள்ளோம்.

இந்தியாவில் ஒரு எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டை, நாடே திரும்பி பார்க்க செய்தவர் எங்கள் முதல்வர் ஸ்டாலின் தான். ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்பு சட்டப்பேரவை. அதுதான் புது சட்டங்களை உருவாக்கவும், இருக்கும் சட்டங்களை திருத்தவும் உருவாகியது. ஆனால் கடந்த 5 வருடங்களில் சட்டப்பேரவை எவ்வாறு நடந்தது? எவ்வளவு அநாகரீகம், எவ்வளவு அராஜகமாக அவர்கள் நடந்து கொண்டார்கள்?

ஒரு முதலமைச்சர் எந்த துறையிலும் அனைத்து பணிகளையும் செய்ய முடியாது. அதற்காக அமைக்கப்பட்டது தான் அமைச்சரவை மற்றும் துறை சார்ந்த குழு.

ஆதிதிராவிடர்களுக்கென ஒரு குழு அப்போது அமைக்கப்படவில்லை. இந்த ஆட்சியில் தான் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை தலைவர் கவனித்து, குழுவை வழி நடத்துகிறார். அந்தக் குழுவுடன் அமைக்கப்பட்ட கூட்டத்தில் கேட்கப்பட்ட கோரிக்கைகளை கொண்டு, அடுத்த நாள் காலை சட்டப்பேரவையில் 110 விதிகளின் படி அவர்களது கோரிக்கைகளை சட்டப்பேரவையில் முன் வைக்கிறார்.

இவரை போல ஒரு முதல்வரை பார்த்து இருக்கிறீர்களா? இதுதான் அவரது செயல்திறனுக்கு எடுத்துக்காட்டு. நான் முதன்மையான முதல்வர் என்பதை விட, தமிழகம் முதன்மையான மாநிலமாக மாற வேண்டும் என சொல்கிறார். சட்டப்பேரவையில் 3,540 கோப்புகளில் நான் அமைச்சராக பொறுப்பேற்றது பின் கையெழுத்து இட்டு இருக்கிறேன். ஆனால் இதுவரை ஒரு முறை கூட தவறு என முதல்வர் என்னை அழைத்து கேட்டது இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் இதனை தாண்டி அடுத்த சாதனைக்கு முன்னேற்றி செல்வோம் என்ற உறுதியை உங்களுக்கு வழங்குகிறேன். இன்னும் 5 ஆண்டுகளில் யாரும் கனவு காண முடியாத பொற்கால ஆட்சியை இந்த அரசு தரும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com