தமிழக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.
திருச்செந்தூர், அமலிநகர் மீனவப்பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் என்பவரின் மனைவி ஜெனிபர். கடந்த 1982-ம் ஆண்டு முதல் திமுக. உறுப்பினராகவும், 1992-ம் ஆண்டு தி.மு.க. மகளிரணி மாவட்ட செயலராகவும் பதவி வகித்தவர். கடந்த 1996 சட்டப்பேரவை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீன்வளத்துறை அமைச்சரானார். அதன்பிறகு 2001 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2001 முதல் தி.மு.க. மாநில மீனவரணி இணைச்செயலராக பொறுப்பு வகித்த இவர், 2004-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து 2008-ம் ஆண்டு அக்கட்சியின் மாநில மீனவரணி இணைச்செயலாராகவும், 2010-ம் ஆண்டில் தேர்தல் பொறுப்பாளராகவும் பதவி வகித்தார்.
2011 சட்டப்பேரவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்பு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சிறுநீரகப்பிரச்னையால் தீவிர அரசியலில் இருந்து விலகிய இருந்த அவரை கடந்த மே மாதம் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த கனிமொழி எம்.பி. அமலிநகர் வீட்டில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன்பிறகு தி.முக. ஆதரவு நிலையிலே அவரது குடும்பத்தினர் இருந்து வந்தனர். இந்நிலையில் சிறுநீரகப்பிரச்னை மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜுலை மாதம் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2.15 மணிக்கு இறந்து போனார்.
அங்கிருந்து அவரது உடல் திருச்செந்தூர் அமலிநகருக்கு இரவு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது. அமைச்சர் ஜெனிபர் சந்திரனுக்கு விஜயன் என்ற ஒரே மகன் உள்ளார். ஆறுமுகநேரியில் உள்ள தாரங்தாரா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.