தியாகி சங்கரலிங்கனார், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று முதன்முதலில் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இதில், 75 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்துக்குப் பின் 1956-ம் ஆண்டு அக்டோபர் 13-தேதி அவர் உயிர்நீத்தார்.
1967-ஆம் ஆண்டு அண்ணா ஆட்சி பொறுப்பேற்ற பின் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை 'தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1968-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, 1968 நவ.23 ஆம் நாள் தமிழ்நாடு என பெயர் மாற்றம் நாடாளுமன்ற மசோதாவில் நிறைவேறியது.
1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டப்பட்டது. ஜூலை 18-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மான நாளைக் கொண்டாட வேண்டும் என்று 2021-ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் அடிப்படையில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது ஒருபுறமிருக்க, 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரியாக மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. அதில், சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகம், ஆந்திரம், கேரளம் என மொழிவாரி மாநிலங்களாக பிரிந்து சென்றன. அந்த வகையில் மொழி வழி மாகாணங்களாக தமிழர்களுக்கு தனி மாநிலம் உருவாக்கப்பட்ட இன்றைய நாளைத்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என எதிர்க்குரல்களும் இருக்கத்தான் செய்கின்றன.
கடந்த 2019-ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இதன்பின்னர் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அப்போது அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலதரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968-ம் ஆண்டு ஜூலை - 18ஆம் நாள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாளைத்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாகப் பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இன்று அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூட, “தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்!” என்றே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான், தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “1956-ல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.
மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.