‘உங்க ராசி, நம்ம ராசினால மழை கொட்டுகிறது, கொங்கு மண்டலத்திற்கு வந்தாவே மழை பெய்கிறது’ என ராசியை பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார் இல்லத் திருமண விழா ஈரோடு மேட்டுக்கடையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமண தம்பதிகளை வாழ்த்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மழை பெய்து வருகிறது. தண்ணீர் கஷ்டமே இல்லை. இது நம்ம ராசி. மக்களின் ராசி.
இது பெரியார் பிறந்த மண். கலைஞரின் குருகுலம். இந்த மாவட்டத்தில் கலைஞருக்கு 3 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 3 அல்ல 300 சிலைகள் இங்கு வைக்கலாம். திமுக ஆட்சிக்கு வரும் முன் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமன்றி சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி கொண்டிருக்கும் ஆட்சி தான் இது. சீர்திருத்த திருமணங்கள் இங்கு நடத்தி வைக்க காரணம், 1962-ம் ஆண்டு அறிஞர் அண்ணா சீர்திருத்த திருமணத்தை சட்ட பூர்வமாக்கி தீர்மானம் நிறைவேற்றினார்.
சமூக நீதியை நிலை நாட்டுவதில் இந்த ஆட்சி பெரும் பங்கு வகிக்கிறது. மழை பெய்தால் கூட கழக தொண்டர்கள் குடும்ப விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், செந்தில் பாலாஜி, மற்றும் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.