12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்கோப்புப் படம்
Published on

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. என்றாலும், இந்த சட்ட மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருந்து வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
12 மணிநேர வேலையில் திமுகவின் நிலைப்பாடு அன்றும்.. இன்றும்! கூட்டணி கட்சிகளே தீவிரமாக எதிர்ப்பது ஏன்?

இந்த மசோதாவின்படி, தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறை கொண்டு வரப்படும். இந்த புதிய சட்ட திருத்த மசோதா தொழிலாளர்களின் விருப்ப தேர்வாக இருக்கும் எனவும், இது கட்டாயம் அல்ல எனவும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சி.வி. கணேசன் ஆகியோர் தெரிவித்திருந்தனர். எனினும், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 12 தொழிற்சங்க நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்து இன்று இரவிற்குள் சட்ட திருத்ததை வாபாஸ் பெறாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறுமென தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னை தலைமை செயலகத்தில், தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மசோதா மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் சட்ட முன்வடிவு நிறுத்தம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட்டு வந்துள்ளது எனவும், தற்போதும் அதே சிந்தனையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், திமுக அரசு எப்போதுமே தொழிலாளர்களின் தோழனாக, தொண்டனாக என்றென்றும் விளங்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு மீதான மேல்நடவடிக்கை நிறுத்தப்படுகிறது எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com