உழவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் பட்ஜெட் அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வேளாண் பட்ஜெட்டை மாநில உழவர் நிலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலைியல், இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது, வேளாண்மைச் சார்ந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைப்பது, ஒட்டுமொத்தமாக கிராமங்களை வளர்த்தெடுப்பது, உழவர்களின் வருமானத்தை உயர்த்துவது, மாற்றுப்பயிர்களை அறிமுகம் செய்வது, இயற்கை இடர்பாடுகளில் இருந்து உழவர்களைக் காப்பது என பல்நோக்கம் கொண்டதாகக வேளாண்மையை மாற்றுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை வழிகாட்டுகிறது.
வேளாண்மை என்பது கிராமம் சார்ந்தது, மழையை நம்பி இருப்பது, நிலங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர்கள் வேறு வழியில்லாமல் செய்யும் தொழில் என்று இல்லாமல், அதனை நவீனப்படுத்தி, லாபம் தரும் தொழிலாகவும், வாழ்க்கை முறையாகவும் மாற்றுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை அடித்தளம் அமைத்துள்ளது.
வேளாண் தொழிலை நம்பி வாழும் உழவர் பெருமக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளிப்பதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. வேளாண் துறைக்கு இந்த ஆண்டு ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் 4,964 கி.மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளன. உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5,157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் கட்டப்பட இருக்கின்றன. உழவர்களுக்கு இடுபொருட்களை எடுத்துச் செல்ல பஞ்சாயத்துகளுக்குப் நிதி வழங்கப்படவுள்ளது. வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் உழவர்களுக்கு ரூ.1,83,425 கோடி கடன் வழங்கப்படுவதை இத்துறை கண்காணிக்க இருக்கிறது.
90 பக்க அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டமும், லட்சக்கணக்கான உழவர் பெருமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாகவும், அவர்களது நிலத்தை முன்னேற்றுவதாகவும், வளத்தை அதிகப்படுத்துவதாகவும் அமையப் போகிறது. இதன் மூலமாக, விளைச்சல் அதிகமாகி, மாநிலத்தின் உற்பத்தி அதிகமாக போகிறது. பசுமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, உழவர்களின் மனத்திலும் விளையப் போகிறது.
மொத்தத்தில், மாநிலத்தை மட்டுமல்ல மண்ணையும் காக்கும் பட்ஜெட்டாகவும், உழவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.