தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை நடக்கிறது. இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பது தொடர்பான வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்குள்ள அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் 7 பேரை விடுவிப்பதில் இனி சட்டச்சிக்கல்கள் இருக்காது என்பதால் தமிழக அமைச்சரவை கூடி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏழு பேரை விடுவிப்பது பற்றியும், முன்விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.