தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக, நிதித்துறை செயலாளர் முருகானந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. 7000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை முதன்முறையாக குறைக்கப்பட்டிருக்கிறது. மழையால் ஏற்பட்ட பேரிடர், கொரோனா தொற்று போன்றவை காரணமாக செலவு அதிகரித்த போதிலும், வருவாய் பற்றாகுறை குறைக்கப்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை இல்லாத ஆண்டாக கொண்டு வருவதுதான் எங்களது இலக்கு. ரூ.43 ஆயிரம் கோடி மூலதனச் செலவுகள் செய்யப்படும். அனைத்து துறைகளுக்கும் எவ்வளவு நிதி தேவையோ அந்த அளவிற்கு போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் 6 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் சதவீதம் இதன் மூலம் பல மடங்கு உயரும். ஏற்கனவே அரசு செயல்படுத்தி வரும் 4 திருமண உதவித் திட்டங்கள் மாற்றப்படாது. மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் 2 மற்றும் 3-ம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள், அரசு பள்ளியில் படித்திருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட உள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உற்பத்தி செய்த பொருட்களை 5% தமிழக அரசு கொள்முதல் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முந்தைய ஆண்டுகளுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மத்திய அரசிடமிருந்து கிட்டத்தட்ட கிடைத்து விட்டது. இந்த ஆண்டுக்கான ஜிஎஸ்டி ரூ.13 ஆயிரம் கோடி வர வேண்டியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு ரூ. 36 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், இது 7 - 8 சதவீதம் அதிகம். இவ்வாறு முருகானந்தம் கூறினார்.