“ஆளுநர் அரசியல் பேசக்கூடாது; இது தவறான முன்னுதாரணம்” - அண்ணாமலை பளீச் விமர்சனம்

“பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கூட நல்ல சட்டம். யாருக்கும் எதிராக இந்த சட்டம் இருக்கப் போவது கிடையாது.”
ஆர்.என். ரவி-அண்ணாமலை-தமிழிசை
ஆர்.என். ரவி-அண்ணாமலை-தமிழிசைகோப்புப் படம்
Published on

“தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஆளுநர் பதில் சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல; ஆளுநர் அரசியல் பேசக்கூடாது; இதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்; ஆளுநர் அவரது கடமையை மட்டுமே செய்ய வேண்டும்; ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதன் முழுவிபரம்;-

“பாரத பிரதமர் மோடி போபாலில் நடைபெற்ற கூட்டத்தில் பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டில், ஒரு வீட்டில் என இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது எனக் கூறியிருந்தார். இதில் சில கட்சிகளின் நிலைப்பாட்டில் நிலைப்பாடு வேறாக இருக்கலாம், அதில் தவறில்லை. உதாரணத்திற்கு அதிமுக இரண்டு மொழி கொள்கையை ஆதரிக்கிறது, புதிய கல்விக் கொள்கையை பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கிறது, வேற்றுமை எல்லா இடங்களிலும் உள்ளது.

”யாரையும் பிரிப்பதற்காக பொது சிவில் சட்டம் இல்லை”

வருகின்ற காலங்களில் பொது சிவில் சட்டத்தை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ, அவர்களும் கூட இது குறித்த நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, சட்டம் குறித்து தெரிந்து கொள்வார்கள். யாரையும் பிரிப்பதற்காக இல்லை. பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கூட நல்ல சட்டம். யாருக்கும் எதிராக இந்த சட்டம் இருக்கப் போவது கிடையாது.

PM Modi
PM Modi

”அதிமுக நிலைப்பாடு மாறும்”

வருகின்ற காலத்தில் அதிமுக நிலைப்பாடு மாறும் என நம்புகிறேன். எப்படி இந்த சட்டத்தை கொண்டு வரப் போகிறார்கள் என பிஜேபி கட்சி மீது அதிமுக நம்பிக்கைக்கொள்ள வேண்டும். அதிமுக-பிஜேபிக்குள் பல்வேறு கருத்து முரண்பாடு இருந்தால் கூட வருகின்ற காலத்தில் எல்லாம் சரி செய்யப்படும். அனைத்துக் கட்சிகளும் இணைந்து பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

மேகதாது அணை விவகாரம் குறித்து..

மேகதாது விவகாரத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு மாநிலங்களின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என நாடாளுமன்றத் துறை அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்திற்கு காவிரி இல்லை என கர்நாடக அரசு சொல்லியுள்ளது. இதனால் தமிழகம் பாதிக்கப்படும். கர்நாடக துணை முதல்வர் தண்ணி கொடுக்க மாட்டேன் என கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. இதற்காக திமுகவும், காங்கிரஸ் ஏன் கண்டிக்கவில்லை.

இதற்காக பிஜேபி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். விவசாயிகள் மீது முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் அக்கறை இல்லை. தமிழகத்தில் இது எப்படி நலம் சார்ந்த அரசாக இருக்க முடியும்.

”கர்நாடக அமைச்சரை முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை?”

பிஜேபியை பொருத்தவரை தமிழகத்திற்கு தண்ணீர் வரவேண்டும்; அதே சமயத்தில் மேகதாதுவில் அணை கட்டக் கூடாது. தமிழ்நாட்டின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிவகுமாரை சந்தித்து பேச வேண்டும். தமிழக அரசு கர்நாடக அமைச்சரையோ, முதல்வரையோ கண்டித்து ஏன் இதுவரை அறிக்கை கொடுக்கவில்லை. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக விவசாய நிலங்களை, திமுக அரசு விட்டுக் கொடுக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

”ஆளுநர் அரசியல் செய்யக் கூடாது”

தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஆளுநர் பதில் சொல்ல, ஆளுநர் அரசியல்வாதி அல்ல. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது; இதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்; ஆளுநர் அவரது கடமையை மட்டுமே செய்ய வேண்டும்; ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com