`சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வரவேண்டும்’ என முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “அரசியல் காரணங்களுக்காக சேது சமுத்திர திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது” எனக் கூறினார். முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தில் “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் மிக வலுப்பெறச் செய்வதற்கு இன்றியமையாத திட்டமாகசேது சமுத்திர திட்டம் விளங்குகிறது. சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும்.
சேது சமுத்திர திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த கட்டுமானம், எந்த மாதிரியான கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பதை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதுகிறோம்” என தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றை தொடர்ந்து, “சேது சமுத்திர திட்டதை நிறைவேற்ற வேண்டும்” என மத்திய அரசை தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தனித் தீர்மானம் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தப் பின்னர், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற
கோரும் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சேது சமுத்திர திட்டம் குறித்த தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்க்கலாம்.
பாரதிய ஜனதா கட்சி சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “கடல் ஆழம் இல்லாத பகுதி என்பதால் மண் எடுக்க எடுக்க சரிந்து கொண்டே இருக்கும். நாங்கள் வழிபடும் ராமர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் அங்கு இருப்பதாக சொல்கிறார்கள். ராமர் பாலத்துக்கு சேதாரமின்றி சேது சமுத்திர திட்டம் வருமானால் ஆதரிக்கிறோம். பச்சோரி கமிட்டி அறிக்கையையும் சேர்த்துக் கொண்டிருக்கலாம். சுனாமி போன்றவை அடிக்கடி வரும் பகுதியாக கருதப்படுகிறது. ராமர் பாதைக்கு பாதிப்பில்லாமல் திட்டத்தை செயல்படுத்தினால் தமிழக பாஜக ஆதரவளிக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “சேது சமுத்திர திட்டம் பயனுள்ள திட்டம் தான். அதில் உள்ள சாதகப் பாதகங்களை ஆராய்ந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதுதான் முன்னாள் முதல்வர் அம்மாவின் நிலைப்பாடும். கால்வாய்க்கான மணலை எடுக்கும் போது மணல் நகரும் என்பதால் அதனை பாதுகாப்பாக வெட்ட வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் கருத்து. ஆராய்ந்து திட்டம் வர வேண்டும் என்பதே ஜெயலலிதா நிலைப்பாடு. திட்டத்தின் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தான் சொல்கிறோம்” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் செல்வ பெருந்தகை பேசும்போது “ஆற்றிலோ, கடலிலோ மணலை அள்ள அள்ள மணல் வரத்தான் செய்யும். சூயஸ் கால்வாயில் கப்பல்கள் தரைதட்டி நிற்பதை அனைவரும் பார்த்தோம். மணல் வந்துகொண்டே இருப்பதுதான் இயற்கை, அதுதான் சேது சமுத்திர திட்டம். சேது சமுத்திர திட்டத்தை இந்து முன்னணியும் இந்த அவையில் ஆதரித்துள்ளது. சேதுசமுத்திர திட்டம் வரலாற்று சிறப்புமிக்க திட்டம், இதை நாங்கள்
வழிமொழிந்து ஆதரிக்கிறோம். தமிழகம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட முக்கியமான திட்டம் இது. ஆனால் இதில் அரசியல் காரணங்களுக்காக சிலர் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். அதனால் இத்திட்டம் முடங்கியுள்ளது” என்று கூறினார்.
அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியபோது, “ராமர் என்கிற கதாபாத்திரம் கற்பனையானது என அவை குறிப்பில் பதிவாகியிருப்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது. 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றுகிற ராமர் என்பவர் சினிமாவில் வரும் கதாபாத்திரமா? ராமர் என்பவர் அவதார புருஷர். ராமர் கற்பனை கதாபாத்திரம் என என்பது அவை குறிப்பில் இருக்கலாம் என்றால் நான் நாங்கள் பேசியதும் இருக்க வேண்டும்.
மீனவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அதில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்து மீனவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே சாதக பாதகங்களை ஆராய்ந்து மக்களுக்கு அதிகளவில் பயன் தரும் திட்டமாக இருந்தால் நிறைவேற்றலாம்.. மக்களுக்கு பயனுள்ள அனைத்து திட்டங்களையும் அதிமுக ஆதரிக்கும்” என்று தெரிவித்தார்.
பாமக உறுப்பினர் மணி கூறுகையில், “இதை கொண்டு வந்தால், சிங்கப்பூர் துறைமுகத்துக்கு நிகராக தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி பெறும். சென்னை மற்றும் பிற நாடுகளிடையே கப்பல் போக்குவரத்து அதிகரிக்கும். கப்பல் போக்குவரத்து நேரம் குறையும். பொருளாதார சிக்கனம் ஏற்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அந்நிய செலாவணி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பாமக ஆதரவு தரும்” என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “கொழும்பு துறைமுகத்தில் இருந்துதான் சரக்கு போக்குவரத்து நடக்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து Transhipment கிடையாது. தூத்துக்குடி துறைமுகம் எப்போது Transhipment துறைமுகமாகும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. நவீன காலத்தில் கடல் வாணிபம் செழிக்க வேண்டும் என்றால் இந்த சேது சமுத்திரத் திட்டம் மிக முக்கியமான ஒன்று. புதிய தொழில் முதலீடுகள் வர இந்த திட்டம் முக்கியமானதாக இருக்கும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
இவை அனைத்தையும் வீடியோ வடிவில் இங்கே காணுங்கள்: