இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10-ஆம் தேதி தமிழகம் வரும் நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் 15-வது சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான பணிகளை ஆணையம் தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை வந்த அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இரண்டு அதிகாரிகளுடன் வரும் 10ஆம் தேதி சென்னை வர உள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனையில் அவர் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. பின்னர், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று, அந்தந்த மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆலோசனையிலும் சுனில் அரோரா ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். தேர்தல் நடத்துவதற்கான சூழல் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் அளிக்கும் தகவலின் அடிப்படையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.