போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் தொழிலாளர்கள் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
வேலைநிறுத்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை சுமூகமாக பேசி தீர்க்கவும் சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கடந்த 19ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இறுதி உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், 47 தொழிற்சங்கங்களுடானான 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. அதில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக நடப்பு மாதம் முன்னிட்டு தலா 1,200 ரூபாய் அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தலா 1,200 ரூபாய் வழங்குவதால் மாதம் 15 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதன் மூலம் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இடைக்கால நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளதாக போராட்ட அறிவிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார். மேலும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு சுமூக முடிவுக்கு வந்துள்ளதாக கூறினார்.