தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது. பின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கு அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ, சி.ஐ.எஸ்.இ.ஐ போன்ற கல்வி வாரியங்களை தொடர்ந்து தமிழக தேர்வு துறையும் பொதுத் தேர்வு முடிவுகளை டிஜிலாக்கர் தளம் வழியாக அறிந்து கொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் டிஜிலாக்கர் தளத்தில் வெளியிடப்பட உள்ளன.