விரைவு செய்திகள்: கொரோனா பரிசோதனை | டி20 உலகக்கோப்பை | இஸ்ரேல் போர்

விரைவு செய்திகள்: கொரோனா பரிசோதனை | டி20 உலகக்கோப்பை | இஸ்ரேல் போர்
விரைவு செய்திகள்: கொரோனா பரிசோதனை | டி20 உலகக்கோப்பை | இஸ்ரேல் போர்
Published on

ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள், உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களை அதிகளவில் தயாரிக்க தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தொழில் நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்கும் அரசின் முயற்சிக்கு பங்களிப்பை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு: சென்னையில் நாள்தோறும் 25 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை நடத்துவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிகாரிகளுடன் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நாள்தோறும் தற்போது, 19 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதாகவும், அதை 25 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாசிட்டிவ் சான்றிதழோடு வெளியில் திரிந்த நபர்கள்: கள்ளக்குறிச்சியில் முக்கிய சாலைகள் தவிர அனைத்து பகுதிகளும் கொரோனா கட்டுபாட்டு பகுதியாக அறிவிக்கபட்டு மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் கொரோனா பாசிட்டிவ் சான்றிதழுடன் இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்தவர்களைக் காவல்துறையினர் பிடித்து சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நிதி மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது: திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் 2016ஆம் ஆண்டு முதல் செந்தூர் பின் கார்ப் என்ற பெயரில் முதலீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் நாள்தோறும் 900ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் 12 மாதங்கள் கழித்து முதலீட்டு தொகை அப்படி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இவை மட்டுமின்றி தங்க நகை, கார் போன்றவை பரிசாக வழங்கப்படும் என பல கவர்ச்சிகர அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். அதை நம்பி, பேராசையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அந்த பணத்துடன் முத்துராமலிங்கம் தலைமறைவாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நாகர்கோவிலில் தலைமறைவாக இருந்த அந்த கும்பலை பாதிக்கப்பட்டவர்களே பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

கொரோனாவால் ஒரே நாளில் 4,529 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 89ஆயிரத்து 851 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 83ஆயிரத்து 248ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது 32 லட்சத்து 26ஆயிரத்து 719 பேர் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 18 கோடியே 58 லட்சத்து 9 ஆயிரத்து 302 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம்: கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் தற்போது வைரஸ் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொரோனா பரவல் என்பது தற்போது கட்டுக்கடங்காமல் அதிகரித்து, உயிர் இழப்பும் உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இன்றைய அறிக்கையின்படி இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் கண்டனம்: சிங்கப்பூர் வகை கொரோனா என்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூற்றுக்கு சிங்கப்பூர் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா குழந்தைகளுக்கு இடையே பரவுவதால், சிங்கப்பூரிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இதற்கு சிங்கப்பூர் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் புதிதாக எந்த வகை கொரோனாவும் பரவவில்லை என்றும், தற்போது புதிதாக தோன்றியுள்ள திரிபு, ஏற்கனவே உள்ளதுதான் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

சண்டையை நிறுத்த வலியுறுத்தல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இஸ்ரேல் விமானத் தாக்குதல்களில் இதுவரை, காஸாவில் உள்ள 6 மருத்துவமனைகள், 9ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 450க்கும் அதிகமான கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் குண்டு வீச்சு காரணமாக காஸாவில் 217 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை வீச்சில் இஸ்ரேல் பகுதியில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. சண்டை நிறுத்தத்தை கொண்டுவரும் பொருட்டு எகிப்து மற்றும் ஐ.நா. பிரதிநிதிகள் இருதரப்பினரிடமும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு வெல்டிங் அடித்து சீல்: சிவகங்கையில் ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் திருடு போவதை தடுக்கும் விதமாக கடைகளின் கதவுகளுக்கு டாஸ்மாக் நிர்வாகத்தினர் வெல்டிங் அடித்து சீல் வைத்தனர். முழு ஊரடங்கில் மதுபானக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாததைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் சிலர் மதுபான கடைகளின் பூட்டை உடைத்து பாட்டில்களை திருடிச் செல்வதால், அதனைத் தடுக்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 129 டாஸ்மாக் கடைகளுக்கும் எளிதில் திறக்க முடியாத வகையில் பூட்டுகளில் வெல்டிங் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தண்ணீரின்றி தவிக்கும் கிராமம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கிளாக்காடு ஊராட்சி புதூர் கிராம மக்கள் தண்ணீர் வசதியின்றி தவித்து வருகின்றனர். கிராமத்தில் ஒரே ஒரு சிறிய நீர்த்தேக்கத் தொட்டி மட்டுமே இருப்பதாகவும், அதில் 15 குடம் மட்டுமே தண்ணீர் கிடைப்பதாலும் கிராம மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும், கொரோனாவை காரணம் காட்டி கிராமத்துக்கு வருவதை தவிர்ப்பதாகவும் புதூர் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தேயிலை பறிக்கும் பணி நிறுத்தம்: கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், உதகையில் தேயிலை எஸ்டேட் இயங்குவதற்கும், தேயிலை தொழிற்சாலை செயல்படவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இங்கு பணிபுரியும் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், அடுத்த அறிவிப்பு வரும் வரை தொழிற்சாலையை இயக்க வேண்டாம் என்றும் தேயிலை பறிக்கும் பணியை நிறுத்திவைக்கும் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேயிலை பறிக்கும் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், 500க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்துள்ளனர்.

ஒருவேளை உணவுக்காக தவிக்கும் முதியோர்: திருச்செந்தூர் கோவிலை சார்ந்துள்ள ஆதரவற்றோர், வயதானவர்களை நோய் தொற்றிலிருந்து காக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது பொதுமுடக்கம் நடைமுறையில் இருப்பதால், தன்னார்வலர்கள் சிலர் கொடுக்கும் ஒருவேளை உணவே அவர்களின் உயிர்களை காத்து வருகிறது. அதோடு, சுகாதாரமற்ற சூழலில் இருக்கும் இவர்கள் எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாகலாம் என்பதால், பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

கொரோனா நோயாளிகள் வெளியேறாமல் தடுப்புகள்: கொரோனா தொற்று இருப்பவர்கள் வெளியே சுற்றுவதை தடுக்கும் வகையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 330 படுக்கைகள் வசதியுடன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அவருக்கு உதவியாக இருப்பவர்கள் கொரோனா வார்டில் தனிமைப் படுத்திக்கொள்ளாமல் மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்தனர். இதனை தடுக்கும் விதமாக மருத்துவமனை நிர்வாகம் கொரோனா வார்டு பகுதி மற்றும் சிகிச்சை மையம் உள்ளிட்ட பகுதிளில் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளது.

வாட்ஸ்அப் புதிய கொள்கையை திரும்பப்பெறுக: ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதையடுத்து வணிக ரீதியான வாட்ஸ் அப் உரையாடல்களின் பதிவுகள், தாய் நிறுவனமான ஃபேஸ்புக் வசம் அளிக்கப்படும் என்ற கொள்கையை அறிமுகப்ப்டுத்தியுள்ளது. இந்த புதிய தனி உரிமை கொள்கையை ஏற்காதவர்களின் வாட்ஸ்அப் இணைப்பு சிறிது காலத்தில் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், வாட்ஸ் அப் நிறுவனம் புதிய தனி உரிமை கொள்கையை திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள பயனாளர்களுக்கும், இந்திய பயனாளர்களுக்கும் இடையே வாட்ஸ் அப் நிறுவனம் இருவேறு கொள்கைகளை பின்பற்றுவதாகவும், வாட்ஸ் அப்-ன் புதிய கொள்கை இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கொள்கைக்கு விரோதமாக இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர்: தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்காக பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதால், மருந்துகளை நேரடியாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பதிவுசெய்த மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.

ஒரே கிராமத்தில் 21 பேருக்கு கொரோனா: ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் 120 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஓரே தெருவை சேர்ந்த 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் வசிக்கும் தெருவில் டிராக்டர் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

சிறுவர்களுக்கு தடுப்பூசி: சிங்கப்பூரில் சிறுவர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஃபைசர் அல்லது பாரத் பயோடெக் தயாரிக்கும் தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் ஆங் ஏ குங் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தில் தொடரும் விலகல்: மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் சர்வாதிகார போக்கே தேர்தல் தோல்விக்கு காரணம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் முருகானந்தம் குற்றம்சாட்டியுள்ளார். மகேந்திரன், சந்தோஷ்பாபு, பத்மபிரியா உள்ளிட்டோரை தொடர்ந்து, தற்போது முருகானந்தமும் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

2000 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. பதுக்கலில் ஈடுபட்ட சாமிநாதன் என்பவரை கைதுசெய்த காவல்துறையினர், வருவாய்த் துறையினர் முன்னிலையில் சாராய ஊறலை அழித்தனர். அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் மட்டும் 5,100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெறிச்சோடி கிடக்கும் எல்லைப்பகுதிகள்: இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழக கேரள எல்லையிலுள்ள நாடுகாணி சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடி வழியாக, நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். நேற்று முதல் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டதால், இங்கு வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நின்றுபோனது. இதேபோல், கூடலூரில் இருந்து கேரளாவை இணைக்கும் பிற சாலைகளும் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

35க்கும் அதிகமான பேராசிரியர்கள் உயிரிழப்பு: டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35க்கும் அதிகமான ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகத்துக்கு கீழுள்ள ஒவ்வொரு கல்லூரியிலும் சுமார் மூன்று ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அவர்களுக்கான மருத்துவ வசதிகளை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடைபெறுமா?: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் திட்டமிட்டு நடத்துவது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், வருகிற அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், கொரோனா 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

டிசம்பர் 8-ல் தொடங்குகிறது ஆஷஸ் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை, அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமன்றி, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்தத் தொடர் வருகிற டிசம்பர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய அறிவிப்பால் நுகர்வோர்கள் குழப்பம்: தமிழ்நாடு மின்சார வாரியம், நுகர்வோரிடமிருந்து இரு மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் வசூலித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழலில், நேரடியாக சென்று மின்நுகர்வை கணக்கீடு செய்யமுடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், மே மாதம் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதத்துக்குரிய கட்டணத்தை செலுத்தினால் போதும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இது மின்நுகர்வோரிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. பலர் 2019 ஆம் ஆண்டு எவ்வளவு கட்டணம் செலுத்தினோம் என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர்.

குஜராத்தில் பிரதமர் ஆய்வு: குஜராத்தில் கரையை கடந்த டவ் தே புயல் கடும் சேதத்தையை ஏற்படுத்தி உள்ளது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு 13 பேர் உயிரிழந்ததாகவும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமானதாகவும் கூறப்படுகிறது. ராணுவத்தினர், பேரிடர் மீட்பு குழுவினர் புயல் காரணமாக சாய்ந்து விழுந்த மரங்கள், மின்கம்பங்களை சரிசெய்யும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில், குஜராத் சென்ற பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்து புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.

ராமநாதபுரத்தில் 22 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 584 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூச்சுத்திணறல் காரணமாக நேற்று ஒரே நாளில் 22 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக, மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், கடைசி ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக அரசு மருத்துவமனைக்கு வருவதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

ரெம்டெசிவிர் வழங்கக்கோரி முற்றுகை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் கொடுக்கப்பட்டு, ஒருவருக்கு 6 குப்பிகள் வீதம் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் மதுரை வந்து மருந்துகளை வாங்கி சென்றனர். இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து ரெம்டெசிவிர் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால், கடந்த 17ஆம் தேதி முதல் மதுரை மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படவில்லை. இதனை கண்டித்து ஏராளமானோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் நிலையை எடுத்துக்கூறிய பின் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளைக் குறைக்கக்கூடாது: டெல்லியில் கொரோனாவை கண்டறியும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை எந்தக்காரணம் கொண்டும் குறைக்கக்கூடாது என துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் உத்தரவிட்டுள்ளார். கொரோனா நோயாளிகளை தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை உரிய அளவில் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கொரோனா சிகிச்சைக்காக டி.ஆர்.டி.ஓ.வால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டட 2டிஜி என்ற பொடி வகையலான மருந்தின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவதற்கும், பிற கட்டமைப்புகளை உருவாக்கப்படுவதை உரிய கால வரம்பை நிர்ணயித்து கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com