ரஷ்ய பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் தமிழ் முறைப்படி புதுக்கோட்டையின் புலவஞ்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் திருமணம் செய்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணியன் - கிருஷ்ணம்மாள் தம்பதியர். இவர்களது மகன் பிரபாகரன், யோகா ஆசிரியராக கடந்த பத்து வருடங்களாக ரஷ்யாவில் வேலை பார்த்து வருகிறார். இவர், ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி - மயூரா தம்பதியரின் மகள் அல்பினா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதுபற்றி மணமகள் வீட்டாரிடமும் தனது தாய் தந்தையரிடமும் கூறி அல்பினாவை திருமணம் செய்து கொள்ள பிரபாகரன் சம்மதம் பெற்றார். இதையடுத்து நேற்று பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூரில் இவர்கள் இருவருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமக்களை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தினர்.
அப்போது பிரபாகரன் கூறுகையில், “நான் யோகா டீச்சராக ரஷ்யாவில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய யோகா மாணவியாக அல்பினால் இருந்த நிலையில், எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து எங்களது பெற்றோர்களிடம் சம்மதம் பெற்று அவர்கள் முன்னிலையே எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது” என்றார்.
மணமகள் அல்பினால் கூறும்போது, “ரஷ்யா கலாச்சாரத்தை விட தமிழ் கலாச்சாரமும், இங்குள்ள மக்கள் மற்றும் இவர்களது வாழ்க்கை முறை, இயற்கை சார்ந்த அமைப்புகளும் எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். கூடிய விரைவில் இங்குள்ள மக்களுடன் சகஜமாக தமிழ் பேசி நானும் ஒரு தமிழ் பெண்ணாக ஆகிவிடுவேன்” என்றார்.