சென்னை மாநகர நூலக ஆணைக்குழுவின் சார்பில், “சொற்களின் முகங்கள்., எழுத்தாளர்கள் கலைஞர்கள் குறித்த பன்னாட்டு ஆவணத் திரைப்பட விழா” எனும் புதிய முயற்சி முன்னெடுக்கப்படுள்ளது. தேசிய நூலக வாரவிழாவினை முன்னிட்டு நவம்பர் 14 முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
எழுத்தாளர்கள் கலைஞர்கள் போன்ற படைப்பாளிகளைக் கொண்டாடும் நோக்கத்துடன் ஆவணப்பட விழா நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்கின்றனர் பலர். எழுத்தாளர் பா.ராகவன் தனது தளத்தில் இது குறித்து கூறுகையில், “ஒரு படைப்பாளி எப்படி உருக்கொள்கிறான் என்பது ஒரு புள்ளி என்றால், அவனது படைப்புகள் சமூகத்தில் உண்டாக்கும் தாக்கம் இன்னொரு புள்ளி. இரண்டுமே நமக்கு முக்கியமானவை. மோசமான திரைப்படங்களைப் பார்த்துவிட்டு சமூக ஊடகங்களில் பொங்கித் தணிவதில் பயனில்லை. எப்போதாவது இப்படி முன்னெடுக்கப்படும் சிறந்த செயல்பாடுகள் கொண்டாடப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
7 நாட்களில் 30 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. அனைத்தும் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் குறித்தானது. சென்னையிலுள்ள தேவநேயப்பாவாணார் மாவட்ட மைய நூலகத்தில் நடக்கும் இந்நிகழ்வு, 7 நாட்களும் காலை 10.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை நடக்க இருக்கிறது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் திரைப்பட இயக்குநர்களுடனான கலந்துரையாடல்களும் நடக்கும்.
அதோடு மட்டுமின்றி திரைப்பட நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள், தாங்கள் பார்த்த திரைப்படங்கள் குறித்து 150 வார்த்தைகள் மிகாமல் விமர்சனக் கட்டுரை எழுதிக் கொடுத்தால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன. கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் உண்டு.
இந்நிகழ்வு குறித்து சென்னை மாநகர நூலக ஆணைக்குழுவின் தலைவரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனிடம் கேட்டோம். அவர்கூறியதாவது, “இதன் முதன்மையான நோக்கமே எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் தற்போது உள்ள தலைமுறையினருக்கும், வரும் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சிதான். புதிதாக வாசிக்க வரும் வாசகர்களுக்கு எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகத்தினை இத்திரைப்படங்கள் கொடுக்கின்றன. இது போன்ற நிறைய படங்கள் இருக்கின்றன. ஆனால், அதை ஒரு விழாவாக முன்னெடுத்து, இலக்கியத்தில் ஆர்வமுள்ள மாணவர்களையும் மக்களையும் இதில் கொண்டுவந்தோமானால் முக்கியமான எழுத்தாளர்கள் யார், அவர் செய்தது என்ன என்பது குறித்து அறிமுகம் அவர்களுக்கு கிடைக்கும்.
40 எழுத்தாளர்களைப் பற்றிய 30 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. ஒவ்வொரு நாள் மாலையிலும் இயக்குநர்களுடன் ஒரு கலந்துரையாடல் இருக்கின்றது. மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்துகிறோம். எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு மனப்பதிவை வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும். எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் மட்டுமே வைத்து ஒரு விழா முன்னெடுக்கப்படுவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்றும் சொல்கிறார்கள்.
நிறைய நண்பர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமாகி உள்ளது. ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன், வாசகசாலை நண்பர்கள் போன்றோர் எங்களுடன் இணைந்து இதை முன்னெடுத்து செய்கின்றனர். இந்த முயற்சி வெற்றிபெற்றால் மற்ற ஊர்களில் நடத்தப்படும் புத்தக கண்காட்சிகளிலும் இந்த படங்கள் திரையிடப்படும். எழுத்தாளர்களைப்பற்றி புதிய படங்கள் எடுக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும். இன்னும் சொல்லப்போனால் கேமராவின் வழியாக நவீன தமிழ் இலக்கியத்தை பார்ப்பதற்கான முயற்சி எனும் சொல்லலாம்.
சமூகப் பிரச்சனைகளைப் பேசாமல் இலக்கியம் பேச முடியாது. சமூகப் பிரச்சனைகளைப்பற்றி பேசாமல் மொழி, பண்பாடு போன்றவற்றைப் பேச முடியாது. கண்டிப்பாக அந்த மாதிரியான படங்களையும் காட்டினால் மாணவர்களுக்கு சமூகத்தில் ஒரு பிடிப்பு வரும்.
நூலக ஆணைக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து வருகிறோம். உலக புத்தக தினத்தை சென்னையில் உள்ள பல்வேறு நூலகங்களில் கொண்டாடினோம். ஒரே நேரத்தில் 18 நூலகங்களில் 100 எழுத்தாளர்கள் பேசினார்கள். சென்னையும் கலைஞரும் எனும் மிகப்பெரிய கருத்தரங்கு ஒன்றையும் நடத்தினோம். இன்னும் பல்வேறு விஷயங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்” என்றார் நம்பிக்கையுடன்.