'சும்மா விடமாட்டேன்; கூண்டோடு மாற்றிவிடுவேன்'-காவலர்களுக்கு டோஸ் விட்ட தாம்பரம் ஆணையர் ரவி

'சும்மா விடமாட்டேன்; கூண்டோடு மாற்றிவிடுவேன்'-காவலர்களுக்கு டோஸ் விட்ட தாம்பரம் ஆணையர் ரவி
'சும்மா விடமாட்டேன்; கூண்டோடு மாற்றிவிடுவேன்'-காவலர்களுக்கு டோஸ் விட்ட தாம்பரம் ஆணையர் ரவி
Published on

புகார் கொடுக்க வரும் பொதுமக்களை அழைக்கழித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தாம்பரம் காவல் ஆணையர் ரவி போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை காவல் ஆணையரகம் பிரிக்கப்பட்டு தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களாக செயல்பட்டு வருகிறது. இதில், தாம்பரம் காவல் ஆணையராக ரவி பணியாற்றி வருகிறார். அண்மையில் பள்ளிக்கரணை பகுதியில் மனைவியை கணவன் தாக்கிய சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பான புகாரை காவல்துறையினர் முறையாக வாங்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் காவல்ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் 4 முறை புகாரளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த தாம்பரம் காவல்ஆணையர் ரவி, நடவடிக்கை எடுக்காத போலீசாரை வாக்கி டாக்கி மூலம் கடுமையாக எச்சரித்தார். அவர் வாக்கி டாக்கியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், "கணவன் அடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 4 முறை புகார் கொடுக்க அந்த பெண் வந்து செல்கிறார். பள்ளிக்கரணை போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர் வரை கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கு மாற்றி விடுவேன்.

தனுஷ்கோடியில் போய் அலையை தான் எண்ணி கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளி விடுவேன். சரியாக நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருக்க கூடாது. வெட்டித்தனமாக வேற வேலைய ஏதாவது பார்த்திட்டு இருந்தீங்கனா அவ்வளவு தான். கூண்டோடு காலிபண்ணி விடுவேன். தாக்கப்பட்டது தொடர்பாக பெண் ஒருவர் புகார் கொடுக்க 4 முறை வருகிறார். ஒரு நடவடிக்கை எடுக்க முடியாமல் என்ன செய்றீங்க. போலீஸ் எதுக்கு அங்கே இருக்கீங்க. காவலர்கள் பொதுமக்கள் சேவகர்கள் தானே. பொதுமக்களை துன்புறுத்ததான் இருக்கிறீர்களா?

இதைபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் சைபர் கிரைம் தொடர்பாக புகார்கள் வந்தால் அந்தந்த காவல் நிலையங்களிலேயே புகாரை பெற்று சிஎஸ்ஆர் கொடுத்து விட வேண்டும். அதன்பிறகு வழக்கை வேறு பிரிவுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். சைபர் கிரைம் புகார்களை தலைமையகத்திற்கு அனுப்பி வைக்ககூடாது. புகார் கொடுக்க வருபவர்களை அலைகழிக்க கூடாது. குறையோடு புகார் கொடுக்க வருபவர்களை உட்கார வைத்து புகாரை பெற்று அனுப்பி விடுங்கள். சரியாக பணியை செய்யுங்கள்.

முறையாக பணி செய்யாவிட்டால் சும்மா விடமாட்டேன் கூண்டோடு தூக்கி விடுவேன். அதன் பிறகு மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

காவல் ஆணையர் ரவி எச்சரித்தவுடன் சம்பந்தப்பட்ட காவலர்களும் தாங்கள் உடனடியாக காவல் ஆணையர் ரவி உத்தரவிட்ட விவகாரங்களில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த வாக்கி டாக்கி ஆடியோ தற்போது வெளியாகி தாம்பரம் காவல் ஆணையரின் கீழ் பணிபுரியும் காவலர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com