நாளையுடன் ஓய்வு பெறுகிறார் தாம்பரம் காவல் ஆணையர் டிஜிபி எம்.ரவி. 31 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய அவரது பின்னணி என்ன? தொகுப்பில் பார்க்கலாம்.
1991 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ரவி ஐ.பி.எஸ். சைபர் பாரன்சிக் மற்றும் சைபர் செக்யூரிட்டி பிரிவில் முதுகலை பட்டம் பயின்றவர். அதோடு மதுரை வேளாண் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மூலம் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஏ.எஸ்.பி-யாக தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து ஓசூர் ஏ.எஸ்.பி-யாக பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற குற்றச் செயல்கள் பலவற்றை தடுத்து நிறுத்தி பலரது பாராட்டைப் பெற்றார். பின் பதவி உயர்வு பெற்று பிரிக்கப்படாத நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாக இவர் பணியாற்றியபோது பரபரப்பு நிறைந்த தங்கம் முத்து கிருஷ்ணன் கொலை வழக்கு குற்றவாளிகளை திறம்பட விசாரித்து கண்டறிந்ததோடு, நிகழவிருந்த பெரும் ஜாதிக் கலவரத்தை தடுத்து நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு. அதேபோல திருத்துறைப் பூண்டி, திருவாரூரில் நடைபெற்ற பரபரப்பான பல்வேறு சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சனைகளை திறம்பட கையாண்டதாக பாராட்டை பெற்றார்.
அதேபோல விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யாக இவர் பணியாற்றியபோது பெரும் ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் திண்டிவனத்தில் நடந்த அம்பேத்கர் சிலை சிதைப்பு செயலை லாவகமாக கையாண்டு, அம்பேத்கர் சிலையைச் சுற்றி பூந்தோட்டம அமைத்து பொது அமைதியை நிலைநாட்டினார். அதேபோல 10 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் ரவுடியிசத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி ஒருவரை திறமையான உளவுப் பிரிவை அமைத்து கைது செய்த பெருமையும் இவருக்கு உண்டு.
அதனைத் தொடர்ந்து சேலம் மற்றும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி-யாகவும், அதேபோல சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி-யாகவும், சென்னை தலைமையிட நிர்வாகப் பிரிவு டி.ஐ.ஜி-யாகவும் இவர் பதவி வகித்துள்ளார். தொடர்ந்து சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையராகவும், சென்னை தலைமையிட கூடுதல் ஆணையராகவும், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராகவும் ரவி ஐ.பி.எஸ் பணியாற்றியுள்ளார்.
சீனா, யூ.கே, யூ.எஸ்.ஏ, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரவி ஐ.பி.எஸ், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் சென்று அங்குள்ள காவல்துறையின் விசாரணை முறைகளை கற்று அதை விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி காவல் நிலையங்கள் அமைத்து நடைமுறை படுத்தினார். அதேபோல பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் முறையை திறம்பட நடைமுறைப்படுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் ஏறத்தாழ 40 ஆயிரம் தன்னார்வலர்களை இணைத்தார். இவர் கொண்டு வந்த முயற்சியால் தமிழக அரசு தற்போது வரை மூன்றாம் பாலினத்தவரை "அரவாணி" அல்லது "திருநங்கை" என்றே குறிப்பிடப்படுகிறார்கள் என்பது அவரின் பெருமைக்கு சான்றாக விளங்குகிறது.
ரவி ஐ.பி.எஸ் சென்னை இணை ஆணையராக பணியாற்றியபோது வட சென்னை பகுதிகளில் கட்டுக்கடங்காமல் இருந்த ரவுடியிசத்தை ஒடுக்கி முக்கியக் ரவுடிகள் பலரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார். அதேபோல அவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் வங்கிக் கடன்கள் கிடைக்க வழிவகை செய்தார். பின் சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக இவர் பணியாற்றியப்பொது மேம்பாட்டுத் திட்டங்களாக விளங்கும் இ-செல்லான் முறை மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கென முகநூல் பக்கம் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுதினார்.
இவரது திறமையான விசாரணை மூலம் மேட்ரிமோனி மோசடி மூலம் 200 இளம்பெண்கள் மற்றும் பெண்களை ஏமாற்றிய லியாகத் அலி கான் என்ற குற்றவாளியை கைது செய்தார். அதேபோல தங்க நகை மோசடியை திறம்பட கையாண்டு ஆயிரக்கணக்கான மக்களை பொருளாதார சிக்கலில் இருந்து காத்தார். அதுமட்டுமல்லாமல் சென்னை காவல்துறையின் 150வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு "காவலர் நமது சேவகர்" என்ற தலைப்பில் குறும்படத்தை திரைக்கதை எழுதி, தயாரித்து நடிக்கவும் செய்தார். ஐ.பி.எஸ் பயிற்சி காலகட்டத்தின்போது உத்தரகாண்ட், முசூரியில் உள்ள லால் பகதூர் சாஸ்த்ரி தேசிய அகாடமியில் நடைபெற்ற குதிரைப் பந்தையத்தில் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல ரிப்லக்ஸ் ஷுட்டிஙிலும் இவர் பதக்கம் வென்றுள்ளார்.
2008 ஆம் ஆண்டு டேராடூனில் நடைபெற்ற அனைத்து இந்திய காவலர் பேட்மிண்டன் போட்டிகளில் தமிழக காவல்துறைக்கு தலைமை வகித்து ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை பெற்றுக் கொடுத்தவராவார். மேலும் பேட்மிண்டனில் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். இவரின் சிறந்த பணிக்குச் சான்றாக 2007 ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம், 2016 ஆம் ஆண்டு புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
சென்னை காவல் ஆணையரகத்தை ஜனவரி மாதம் 1ஆம் தேதி இரண்டாக பிரித்த போது தாம்பரம் காவல் ஆணையராக ரவி நியமிக்கப்பட்டார். ஆணையராக பொறுப்பேற்ற பிறகு ரோந்து பணியை தீவிரப்படுத்தினார். ஈ.சி.ஆர் ரிசார்டில் நடந்த மதுபான விருந்தில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ வைரலாகி பெரும் பாராட்டை பெற்றது. அதே போல தாம்பரம் பகுதியில் பணியாற்றி வரும் காவலர்கள் தவறு செய்தால் தண்ணியில்லாத காட்டுக்கு அனுப்பிவிடுவேன் என வாக்கிடாக்கியால் பேசிய ஆடியோ வைரலாகி காவலர்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. மேலும் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை போக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த 6 மாதங்களாக காவல் ஆணையராக பணியாற்றி வந்த ரவி இன்று ஓய்வுப் பெறுகிறார். பிரிவு உபச்சார விழா டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் இன்று மாலை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ரவி நாளையுடன் ஓய்வுபெறுவதால் தாம்பரம் காவல் ஆணையர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வருகிறது.
-சுப்ரமணியன்