நெல்லையில் 10 வயது சிறுமிக்கு திருமணச் சான்று கேட்ட திசையன்விளை வட்டவழங்கல் அலுவலரால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை வட்டம் முதுமொத்தான் மொழியை அடுத்துள்ள தலைவன்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். இவரது மகளுக்கு புதிய குடும்ப அட்டை பெறுவதற்காக தனது குடும்ப அட்டையிலிருந்த பேரன் - பேத்தி ஆகியோரின் பெயர்களை நீக்குவதற்காக பொன்னம்மாள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.
இதனை பரிசீலித்த திசையன்விளை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் பொன்னம்மாளின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துள்ளார். இதனால் வேதனையடைந்த பொன்னம்மாளின் குடும்பத்தினர் ஆன்லைனில் விண்ணப்ப நிலையை சரி பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணம் கூறும் பகுதியில் 10 வயது சிறுமியான பேத்தி ஐஸ்வர்யா முருகலெட்சுமிக்கு திருமணச் சான்று இணைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் மனுக்களை அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முறையாக பரிசீலிப்பதில்லை என்றும், கட்டணம் செலுத்தி செய்யப்படும் ஆன்லைன் மனு பதிவுகளை அலட்சியத்துடன் அதிகாரிகள் தள்ளுபடி செய்வதால் பொதுமக்களின் பொருளாதாரமும் பொன்னான நேரமும் உழைப்பும் வீணடிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த நிலையில் 10 வயது சிறுமிக்கு திருமணச் சான்று கேட்டு திசையன்விளை தாலுகா வட்ட வழங்கல் அதிகாரியால் பெயர் நீக்கல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பெரும் வேதனை அளிப்பதாக பொன்னம்மாள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அரசு நிர்வாக நடவடிக்கைகளை மின்னணு முறையில் கையாளுவதை அரசு ஊக்குவித்து வரும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் உதாசீனப் படுத்தையும் சிரமப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.