கொரோனா ஊரடங்கில் தொழில் வாய்ப்புகளை இழந்து நின்ற தையல் கலைஞர்கள் பலருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலால் புதிய ஆர்டர்களை கிடைத்து, உரிய வருமானத்துடன் தங்களது இயல்பு வாழ்க்கையை 'ரீ-ஸ்டார்ட்' செய்ய முடிந்திருக்கிறது
கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டது. சிறு, குறு தொழில் நடத்தி வந்த பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, தொழில் நடத்தி வந்த பலர் தொழிலாளி ஆனார்கள். அப்படி, கொரோனாவால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் நெல்லையில் தையல் கடை நடத்தி வரும் முருகன்.
குடும்பச் சூழல் காரணமாக 14 வயதில் தையல் கடை வேலைக்குச் சென்று, பின்னர் சொந்தமாக கடை வைத்து தையல் தொழில் செய்து வருபவர் முருகன். நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.700 வரை வருமானம் கிடைக்கும். இந்த வரவுதான் வீட்டில் குழந்தைகளின் படிப்புச் செலவு, அன்றாட குடும்ப தேவைக்கான செலவுக்கு துணைபுரிகிறது. ஆனால், கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு காரணமாக ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படாததால் ஏப்ரல், மே மாதங்களில் வரக்கூடிய பள்ளி மாணவ - மாணவிகளுக்கான யூனிபார்ம் ஆர்டர்கள் வரவில்லை. இது, மற்ற டெய்லர்களையும் போலவே முருகனுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், ஊரடங்கு காரணமாக கடந்த வருட தீபாவளி பண்டிகையில் புதுத்துணி ஆர்டர்களும் பெரிதாக பணவரவை தரவில்லை.
இந்தச் சூழலில், நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல், தையல் கலைஞர்களின் வாழ்வில் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
தேர்தலுக்காக வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி சகிதம் தொண்டர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் புதிய அவதாரம் எடுப்பார்கள். பரப்புரைக் களங்களில் வெள்ளை சட்டைகளின் ஆதிக்கம் இன்று தையல் தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை வெளிச்சமாக்கி உள்ளது.
"இந்த வருஷம் வழக்கம்போல் வரவேண்டிய பள்ளி யூனிஃபார்ம் ஆர்டர்கள் இன்னும் வரலை. இதை ஈடுகட்டும் விதமா, இந்தத் தேர்தல் காலத்தில் வெள்ளைச் சட்டை ஆர்டர்கள் ஓரளவு வருது. இதுதான் வீட்டின் அன்றாட தேவையை, பிள்ளைகளுக்கான தேவையை சமாளிக்க தேவையான வருமானத்துக்கு உறுதி செஞ்சிருக்கு" என்கிறார் தையல் கலைஞர் முருகன்.
"தீபாவளி சீசன் மாதிரி ஒரு வாரமா ஆர்டர் வந்துட்டு இருக்கு. கொரோனா காலத்துல ஏற்பட்ட நிதிச் சிக்கலில் இருந்து ஓரளவு மீள முடியுது. இது கொஞ்சம் புதுத் தெம்பு கொடுத்துருக்கு" என்று நிம்மதியைப் பதிவு செய்கிறார் தையல் கலைஞர் பாபு.
பெருந்தொற்றுப் பேரிடரிலிருந்து மீள்வதற்கு, இந்த தேர்தல் உழைப்புக்கான வாய்ப்பையும், அதற்கான ஊதியத்தையும் கொடுக்கக்கூடிய ஒன்றாக அமைந்திருப்பதையும் இந்தத் தையல் கலைஞர்கள் மூலம் உணர முடிகிறது.
- நாகராஜன்