‘மாற்றுத்திறனாளி’- பெயருக்குள்ளேயே மாற்று திறன் கொண்டவர் என்பதை நாம் புரிந்துக்கொள்ளலாம். அப்படியொரு மாற்றுத்திறன் கொண்டவர்தான் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸூம். அவர் கொண்ட அந்தவொரு மாற்றுத்திறன்... அவரை சார்ந்தோர் மட்டுமன்றி, நம்மையும் ஊக்கப்படுத்தும் வகையில், சொல்லப்போனால் பெருமைப்படுத்தும் வகையிலானது என்பதுதான் இன்னும் இன்னும் ஸ்பெஷல்.
சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் - வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் (29). இவர் பிறவியிலேயே கால், கைகள் செயல்பாடுகளில் குறையுடைய மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாக இருந்துள்ளார். ‘செரிபரல் பால்ஸி’ (Cerebral palsy) என்ற பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட இவரால், பேசவோ, தானே தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ முடியாது. இப்படியான நிலையில் இவர் மனதை ஒருமுகப்படுத்த இவரது பெற்றோர் இவருக்கு நீச்சல் பயிற்சியளிக்க முடிவுசெய்துள்ளனர். உரிய பயிற்சியாளர்கள்மூலம் அதற்கான வழிவகைகளையும் செய்துள்ளனர். அப்படி ஸ்ரீராம் தனது 4 வயது முதலே 'ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் நீச்சல் கற்க தொடங்கியிருக்கிறார்.
பொதுவாக நீந்துபவர்கள் கை, கால்களை அசைத்து ‘ப்ரீ ஸ்டைல்’ முறையில் நீந்துவர். ஆனால், இவரால் கால்களை அசைத்து நீந்த முடியாது என்பதால் நெஞ்சை அசைத்து (ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் முறை) நீந்துவார். கொஞ்சம் கொஞ்சமாக அதில் தேர்ந்திருக்கிறார் ஸ்ரீராம்.
சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல, நீச்சலில் தேர்ந்திருக்கிறார் ஸ்ரீராம்! அதன் பலனாக, நீச்சல் துறையில் சாதிக்கும் அளவுக்கு உயர்ந்தும் இருக்கிறார்.
கடந்த 2018-ல் தேசிய மாணவர் படை நடத்திய போட்டியில் கடலூர் - புதுச்சேரி இடையேயான தொலைவை கடலில் நீந்தி சாதனை படைத்தார் இவர். இதற்காக மத்திய அரசின் சமூக நீதித் துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த முன்மாதிரி இளைஞர் என்ற தேசிய விருதை அப்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவிடமிருந்து பெற்றார்.
இந்நிலையில் பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த இவரது பெற்றோர், இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவிலுள்ள தனுஷ்கோடி வரையிலுமான பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸை தயார் படுத்தியுள்ளனர். அதன்பேரில் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள சங்குமால் துறைமுகத்தில் இருந்து கடந்த புதன்கிழமை (நேற்று முன்தினம்) காலை தனது பயிற்சியாளர்கள் மற்றும் மீனவர்கள் என 20 பேர் கொண்ட குழுவினருடன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் தலைமன்னாருக்கு புறப்பட்டுச் சென்றார்.
தலைமன்னாரில் புதன்கிழமை மாலை 05.10 மணியளவில் நீந்தத் தொடங்கி, வியாழக்கிழமை மதியம் 01.30 மணியளவில் (20.20 மணி நேரம் தொடர்ந்து நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைந்தார். இதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பார்வையாளர் விஜயக்குமார் உறுதி செய்தார்.
இதைத் தொடர்ந்து அரிச்சல்முனை வந்தடைந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸை அவரது குடும்பத்தினர், ராமேஸ்வரம் டி.எஸ்.பி உமா மகேஸ்வரி, சுங்கத்துறை கண்காணிபாளர் சம்பத், மெரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்டோர் உற்சாகத்துடன் நேற்று வரவேற்றனர். இது மாற்றுத்திறனாளிகளுக்கான மிகப்பெரிய ஊக்கத்தை கொடுக்குமென்றும் பலரும் பாராட்டினர்!
இது குறித்து ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸின் தாய் வனிதா செய்தியாளர்கள் மத்தியில் கூறும்போது, “என் மகன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தையாக இருந்த போதும் அவரை எதிலாவது சாதிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் நீச்சல் கற்றுக்கொடுக்க தொடங்கினோம். அவருக்கும் இதில் விருப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
‘செரிபரல் பால்ஸி' நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வளர்ப்பதே சிரமம். என் மகனை போன்று ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அவர்களின் பெற்றோர்களுக்கு இவர் ஓர் ஊக்குவிப்பாளராக இருப்பார். இவரை போன்ற குழந்தைகளை பெற்றோர், காப்பகங்களுக்கு அனுப்பாமல் தாங்களே பாதுகாத்து வளர்க்க வேண்டும். பாக்ஜலசந்தி கடலை சுமார் 30 கி.மீட்டர் இரவும் பகலும் நீந்திக்கடந்து என் மகன் சாதனை படைத்துள்ளது பெருமையாக உள்ளது” என்று பெருமிதத்துடன் பேசினார்.
அவர்களுக்கு மட்டுமல்ல... நமக்கும் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் பெருமைதான்!
ஆம்... ‘எதை சொல்லி உன்னை நிராகரித்தார்களோ... அதையே உன் ஆயுதமாக்கு!’