சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை நீடிக்கும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் அதிகமாக திறப்பதால், அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கனமழை நீடிப்பின் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஆகிய ஏரிகள் ஏற்கெனவே நிரம்பியதால், தற்போது பெய்த மழைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து இன்று காலை முதல் 6,000 கன அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் திறப்பு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலை முற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளதால், அந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வேலைக்குச் செல்பவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சாலை தற்போது அடைக்கப்பட்டுள்ளதால் அரசு பேருந்துகளும் திருப்பி அனுப்பப்படுகின்றன. ஆனால் சிலர் மட்டும் ஏரி மதகின்மீது செல்வதற்கு அனுமதிக்கப் பட்டனர்.
கனமழை பெய்து கொண்டிருக்கும் நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் வரதரஜபுரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் அடையாற்றுக்கரை கால்வாய்க்கு செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே அடையாற்றின் கரையோரம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது நீரின் திறப்பு அதிகரித்து வருவதாகவும் அடையாற்றில் மீண்டும் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, படிப்படியாக உபரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.