தஞ்சாவூர் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு சொந்தமான மடம் மற்றும் கோவில்களில் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் இந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைத்த சூரியனார் கோவில் ஆதீனம் 28வது மடாதிபதி மகாலிங்க சுவாமிகளை போலீசார் பாதுகாப்புடன் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சூரியனார் கோவில் ஆதீனம், 28வது குரு மகா சன்னிதானமாக இன்று வரை நான் தான் தொடர்கிறேன். அந்தப் பணிகளில் இருந்து என்னை நீக்கவில்லை. வெறும் நிர்வாகப் பொறுப்புகள் மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதீனம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றுக்கு இணை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்ட மூலமாக ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்க எல்லா நடவடிக்கையும் எடுக்கப்படும். எனக்கு இன்னும் மடங்கள் இருக்கிறது நான் அங்கே செல்கிறேன்.
ஒன்பது கோவில்கள் மற்றும் உஷகால கட்டளை போன்ற சொத்துக்கள் இந்த மடத்திற்கு சொந்தமாக உள்ளது. அதனை மீட்க சில வழக்குகள் போட்டுள்ளோம். அதற்கு சில எதிர்ப்புகள் வந்துள்ளன அந்த எதிர்ப்புகளின் விளைவு தான் இவையெல்லாம்” என்றார்.
மேலும் திருமணம் செய்துகொண்டது குறித்து பேசிய அவர், “நான் திருமணம் செய்து கொண்டது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை இதற்கு முன்னாள் இருந்த ஆதினம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்படி நானும் திருமணம் செய்துள்ளேன். அறநிலையிடம் முழு பொறுப்பை ஒப்படைத்தவுடன் தான் கர்நாடகாவிற்கு செல்வேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பக்தர்கள் சிலர் திருமணம் செய்த காரணத்தை கூறி மடத்தில் இருந்து ஆதினத்தை வெளியேற்றி பூட்டு போட்டதால் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.