மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக சென்னையில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் வெள்ள நீருடன் வெளியேறி எண்ணூர் முகத்துவாரத்தில் படர்ந்தது.
இதன் காரணமாக அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை மாநில அரசு முடுக்கிவிட்ட நிலையில் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மேற்பார்வையில் நான்கு பகுதிகளாக பிரித்து நடைபெற்ற இந்தப் பணியில், 4 நிறுவனங்கள் மற்றும் மீனவர்கள் துணையுடன் சுமார் 900 பேர், எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
128 படகுகள், 7 ஜேசிபிகள், 8 கல்லி சக்கர்ஸ், 6 பொக்லைன்கள், 3 ஹைட்ராக்ரான்கள், 4 பிக்கப் டிரக்குகள், 8 ஆயில் பூமர்கள் எனப்படும் எண்ணெய் தடுப்பான்கள், 6 ஆயில் ஸ்கிம்மர்கள் மற்றும் 15 டிப்பர்கள் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட்டது.
சுமார் 9 கிலோ மீட்டர் தூரம், 105 புள்ளி 82 கிலோ லிட்டர் எண்ணெய் படர்ந்த நீர் மற்றும் 393 புள்ளி 5 டன் எண்ணெய் கசடுகள் மொத்தமாக அகற்றப்பட்டுள்ளது. இதனை சுற்றுச்சூழல் துறையின் செயலாளர் ஆய்வு செய்து உறுதி செய்தார்” என்று கூறப்பட்டுள்ளது.