அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரபு மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரின் மீது சபாநாயகரிடம், கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் விளக்கம் அளிக்கக் கோரி, சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கிடையே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்தது.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். தடை கோரி நீதிமன்றம் செல்ல விருப்பமில்லை எனவும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது சபாநாயகர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது எம்.எல்.ஏ. பிரபுவும் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், விளக்கமளிக்கக் கோரி சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தனர்.