பெண் காவலர்கள் மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்தது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் யூ ட்யூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மகன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாயார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், மூன்றாவது நீதிபதியும் ஆட்கொணர்வு மனுவை இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரணை செய்ய வேண்டும் என மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்தார். இதனையடுத்து சவுக்கு சங்கரின் தாயார் தன் மகன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன் துலியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சவுக்கு சங்கர் தடுப்பு காவலில் வைக்கப்படக்கூடிய அளவிற்கு அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தாரா? நீங்கள் மிகக் கடுமையாக அவரிடம் நடந்து கொள்ள முடியாது. சவுக்கு சங்கரின் நடத்தையும் மன்னிக்க முடியாத ஒன்றுதான். இருப்பினும் ஏன் இடைக்கால நிவாரணத்தை வழங்கக் கூடாது?” என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, “அவர் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார். மேலும் தற்போது பெண் போலீஸ் அதிகாரிகள் மீது அவதூறுகளையும, குற்றச்சாட்டுகளை கூறி பேட்டியும் அளித்துள்ளார். அது என்னென்ன வார்த்தைகள் என்பதை இந்த நீதிமன்றத்தில் கூற விரும்பவில்லை” என கூறினார். இதனையடுத்து மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணைையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.