ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து இருந்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் அவர்.
அதேநேரம் 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தமிழக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதன்பின் கடந்த ஜூன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பண மோசடி தொடர்பான வழக்கில் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார் ராஜேந்திர பாலாஜி. ஆனால் அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் ராஜேந்திர பாலாஜி தமிழகம் முழுவதும் பயணம் செய்ய அனுமதி அளித்தும் வழக்கு விசாரணை நடைபெறும் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும் என்று கூறியும் நிபந்தனைகளை தளர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் ஜாமீன் வழங்கி தனக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரியும் ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை முடிய மேலும் 6 மாத காலம் ஆகும்” என தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அடுத்த ஆறு மாதம் வரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்கான தடை நீக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “ஜாமீன் நிபந்தனைகளை முழுமையாக தளர்த்த வேண்டும். அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் “வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தைநாடி அனுமதி பெற்று செல்லலாம்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.