தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா, சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார். இதைத் தொடர்ந்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

இதன் தொடர்ச்சியாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில், சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருப்பதால், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கூறி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.

அவர்களது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் வாதிட்டார். இதையடுத்து வழக்கை திங்கள்கிழமை,  விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.

அதன்படி இன்று காலை வழக்கு விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு , அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே விசாரணை நடந்த நிலையில் நோட்டீசுக்கு தடை விதித்து ரஞ்சன் கோகாய் அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com