சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், பிணை வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நடைபெற்றுவந்த நிலையில் இதற்கான தீர்ப்பு இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அப்படி இன்று மறுவிசாரணைக்கு வந்த அந்த வழக்கில், கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணை குற்றவாளியாக இருந்த செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அவர் மீண்டும் அமைச்சராக தடையில்லை என திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக செந்தில் பாலாஜி பலமுறை பிணை கோரி மனுத்தாக்கல் செய்தும், அவை தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி நிராகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பிணை வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அமைச்சராக தடையில்லை என்பதால் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் சில மணி நேரத்தில், உரிய நடைமுறைகளுக்குப்பின் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வருவார் என சொல்லப்பட்டுள்ளது.