தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க தடை விதிக்கக்கோரித் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க தடை விதிக்கக்கோரி ராகவன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் பெப்சி, கோக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக தெரிவித்திருந்தார். மேலும், குடிநீர், விவசாய பயன்பாட்டிற்கு பின்னர் மீதமான தண்ணீரைத்தான் நிறுவனங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலத்தின் தண்ணீர் பயன்பாடு குறித்து நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், தண்ணீர் பயன்பாட்டு கொள்கை மாநில அரசினுடையது என்றும் தெரிவித்தது. பின்னர் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.