மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனுமதி கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை மெரினாவில் 100 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்தது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய அனுமதி அளிக்கக்கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தை நாடினார்.
2003ஆம் ஆண்டு முதலே மெரினாவில் போராடுவதற்கு தடை இருப்பதாக தமிழக அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் பகுதி என்பதால் மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் அரசின் சார்பில் கூறப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினாவில் நடந்தது அய்யாக்கண்ணு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மாநில அரசின் பாதுகாப்பு சார்ந்த கொள்கை விவரங்களில் தலையிட முடியாது என்றும், மெரினாவில் போராட அனுமதிக்க முடியாது எனவும் கூறி அய்யாக்கண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.