சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பஞ்சாப் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதேநிலை தங்கள் மாநிலங்களிலும் தொடர்வதாக தமிழ்நாடு, கேரளா அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு கடந்த 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வாதங்களை கேட்ட நீதிபதி ஆளுநரை கடுமையாக சாடியது உச்சநீதிமன்றம். குறிப்பாக பஞ்சாப் ஆளுநரை, “நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்” என்றும் “மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற மாநில அரசுகள் நீதிமன்றத்தை நாடும் நிலையை உருவாக்குவதா? ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர் என்பதை உணர வேண்டும்” என்றும் கூறியிருந்தது உச்சநீதிமன்றம். இத்தோடு “தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கை முக்கியமானதாக பார்க்கிறோம்” என்றும் நீதிபதிகள் கூறினர்.
அதையடுத்து, இவ்வளவு காலம் கிடப்பில் இருந்த மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். அவற்றை திருப்பி ஆளுநருக்கே அனுப்பும் வகையில், சென்ற வாரம் சனிக்கிழமை தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
அதில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டசபையின் ஒப்புதலோடு மீண்டும் அவருக்கே திருப்பி அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், “ஏற்கெனவே அனுப்பிய மசோதாக்களை இவ்வளவு காலம் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது திருப்பி அனுப்புவது ஏன்? தமிழ்நாடு ஆளுநர் ஒவ்வொரு நிபந்தனையையும் மீறியிருக்கிறார்.
மாநில அரசு மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைப்படி ஒரு ஆளுநர் செயல்பட வேண்டும். சட்டப்பேரவையில் 2 வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். சட்டமன்றம் இயற்றிய மசோதா தவறாக இருந்தாலும் அதனை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?” என வாதிடப்பட்டது.
மத்திய அரசு தரப்பில், “ஆளுநருக்கு உள்ள துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை பறிக்க மாநில அரசு முயற்சிக்கிறது. மசோதாக்களை பரிசீலத்தை பிறகே நடவடிக்கை எடுக்க முடியும்” என கூறப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில், “2 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு உள்ளன?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
பின், விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.