பணிக்கு வராமல் போராடிய மருத்துவர்களால் நோயாளிகள் மரணம்? அரசின் குற்றச்சாட்டும் நீதிமன்ற தீர்ப்பும்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொல்கத்தா மருத்துவர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்முகநூல்
Published on

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொல்கத்தா மருத்துவர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் பணிக்கு வராததால் 23 நோயாளிகள் உயிரிழந்ததாக மேற்குவங்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி, “மருத்துவர் படுகொலையில் இதுவரை ஒரு நபர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் ஒரு மாதமாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போதிய அளவு சிசிடிவி கேமராக்கள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்திருந்தால் எப்படி இத்தகைய படுகொலை நடந்திருக்கும்? பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த மாணவி படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று உடனடியாக ஏன் புகார் பதிவு செய்யப்படவில்லை?” என்று வினவினார்.

அப்போது, “பல மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது” என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

மருத்துவர்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி: டாஸ்மாக் திறக்க வேண்டுமென ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராமத்தினர்

மேற்குவங்க அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி பணிக்கு திரும்பவில்லை” என தெரிவித்தார். இதையடுத்து “செப் 10 மாலை 5 மணிக்குள் அனைத்து மருத்துவர்களும் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு பணிக்கு திரும்பும் மருத்துவர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது” என மேற்குவங்க அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியது.

இத்துடன், “மருத்துவர்களுக்கு தேவையான ஓய்வு அறை மற்றும் ஆண், பெண் மருத்துவர்களுக்கு தனித்தனி கழிவறை போன்ற வசதிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்” எனவும் மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, இந்த வழக்கில் இதுவரை நடைபெற்ற விசாரணை தொடர்பான நிலை அறிக்கை ஒன்றை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை தொடர்ந்து சிபிஐ நடத்தவும், வரும் 16ஆம் தேதிக்குள் மீண்டும் ஒரு நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com