நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
மதன் பி லோகூர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, நீலகிரியில் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, யானைகள் வழித்தடத்திலுள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்டுகளை உடனடியாக நீக்கக்கோரி உத்தரவிட்டிருந்தது. மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் கூறியிருந்தது. இதனை துரிதமாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டிருந்து நீலகிரி ஆட்சியராக பணியாற்றிவந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்யும் சூழல் நிலவியதால், அவரை பணியி டமாற்றம் செய்யக்கூடாது என 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் நிர்வாகரீதியாக மாற்றங்களை செய்ய அனுமதிவேண்டும் என தமிழக அரசு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்ய அனுமதி அளித்திருக்கிறது.