தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறையும் எனவும் உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் தென் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வெப்ப நிலை 1 அல்லது 2 டிகிரி செல்சியல் குறைந்துள்ளது. ஆனால் உள் மாவட்டங்களை பொறுத்தவரையில் மேற்கு திசை காற்றின் வேகம் குறைந்துள்ளதால், வெப்பம் அதிகரித்துள்ளது. இந்த நிலை 3 நாட்களுக்கு தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என பாலசந்திரன் தெரிவித்தார்.
கோடை மழையைப் பொறுத்தவரையில், நேற்று பேச்சிப்பாறை மற்றும் செங்கோட்டையில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பொழிய கூடும். வெப்பத்தை பொறுத்தவரையில் கரூர் பரமத்தியில் அதிக அளவு பதிவாகி வருகிறது. சென்னையில் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை தொடரும் என்றும் அவர் கூறினார்.