தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் சற்றே தணிந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இன்று 5 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. இதனிடையே பல இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அக்னிநட்சத்திர காலகட்டத்தில்தான் சென்னையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகும். ஆனால் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த பின்பும் கடந்த சில நாள்களாகத் தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் பல இடங்களில் இன்று வெயில் சற்றே தணிந்து காணப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழையைத் தொடங்கியுள்ளதால் அம்மாநிலத்தையொட்டி பகுதிகளில் வெயில் குறைந்து, மழைபொழிவு இருக்கிறது. சென்னையில் கடந்த சில நாள்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவில் மழைப் பெய்து குளிர்ச்சியை தருகிறது.
தமிழகத்தில் இன்று மதுரை விமான நிலையம் 102.5, மதுரை 102.2, வேலூர் 101.6, திருச்சி 101.3, கரூர் பரமத்தி 100.4 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெயில் பதிவாகி இருக்கிறது.