திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது நடுக்காட்டுப் பட்டி. 2019-ஆம் ஆண்டு இதே நாளில் இந்த சிறிய கிராமத்தில், தட்டுத்தடுமாறி தளிர்நடை போட்ட குழந்தை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு இருந்த செயலிழந்த போர்வெல்லில் விழுந்து குழந்தை உயிருக்கு போராடிய சம்பவம் உலகம் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
உயிருக்கு போராடிய குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 80மணி நேரமாக நீடித்த இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த துயரச்சம்பவம் குழந்தையின் பெற்றோர்களை மட்டுமல்லாது உலக நாடுகளில் உள்ள மக்களின் இதயங்களையும் நொறுக்கியது.
உலகை உலுக்கிய இந்த துயரச்சம்பவம் நடந்து இன்றோடு 365 நாட்களை கடந்த பின்பும் குழந்தை சுஜித்வில்சனின் கிராமமக்களும் அவனது பெற்றோர்களும் சுஜித்தின் பரிதாப இழப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. சுஜித் இறப்பின் மூலம் பிரபலமான இந்த கிராமத்தில் நிசப்தமே தொடர்கிறது.
இந்த அசாதாரண இழப்புக்கு பின் ஒருவருடம் கழித்தும், சுஜித்வில்சனின் பெற்றோர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. சுஜித் தவறி விழுந்து உயிரிழந்த இடத்தில் அவன் நினைவாக நினைவு கட்டடம் கட்டப்படும் என்று ஆசைவார்த்தை கூறிய அரசியல்வாதிகள் போர்வெல்லை மட்டும் கான்கிரீட் கலவையால் மூடியுள்ளனர்.
சுஜித்தின் பெற்றோருக்கு அரசு, அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனிநபர்களால் லட்சக்கணக்கில் நிவாரணத் தொகை வழங்கியிருந்தாலும், அது அவர்களை திருப்திப்படுத்தவில்லை. காசு மட்டும் போதுமா… உலகில் துரதிர்ஷ்டவசமான பெற்றோர்களாக நாங்கள் உள்ளோம் என கண்ணீர் வடிக்கிறார் தாய் கலாமேரி. சிறுவனின் உயிரிழப்பிற்கு வந்த தொகையில் ஒரு பைசா கூட எடுத்து செலவு செய்ய மனமில்லை என கூறும் தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ் மீண்டும் கட்டட தொழிலுக்கு சென்றுள்ளார். இந்த ஓராண்டில் எந்த மாற்றமும் அவர்கள் வீட்டில் நடந்துவிடவில்லை.