ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டது ஏன்? வழக்கில் திடீர் திருப்பம்

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டது ஏன்? வழக்கில் திடீர் திருப்பம்
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டது ஏன்? வழக்கில் திடீர் திருப்பம்
Published on

திருவாரூரில் காரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கும்பகோணம் அருகே மீட்கப்பட்டார். கடத்திச் சென்றவர்களே காவல்துறையினருக்கு பயந்து அவரை விட்டுச் சென்றனர்.

திருவாரூரைச் சேர்ந்த நீதிமோகன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கட்டி நிலம் வாங்கும் திட்டம் ஒன்றை நீதிமோகன் அறிவித்தார். அதை நம்பி பலர் அவரிடம் பணம் கட்டியுள்ளனர். விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை விதிக்கப்பட்டதால் நீதிமோகனால் பேசியபடி நிலத்தை தர முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் நீதிமோகன் மீது மோசடிப் புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில் திருவாரூர் பிடாரி அம்மன் கோயில் அருகே தனது நண்பருடன் நீதிமோகன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தை மறித்துள்ளது. அதிலிருந்து இறங்கிய 5 பேர் நீதிமோகனை குண்டுக் கட்டாக தூக்கி காருக்குள் போட்டனர். அடுத்த சில விநாடிகளில் காரில் நீதிமோகனை கடத்திச் சென்றுவிட்டனர். 

திரைப்படப் பாணியில் நடந்த இந்தக் கடத்தல் குறித்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் சிவா என்பவருக்குச் சொந்தமானது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதற்கிடையே நீதிமோகனின் செல்போனில் இருந்தே அவரது குடும்பத்தை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் சிவாவின் குடும்பத்தினர் மூலம் நீதிமோகன் செல்போனை காவல்துறையினர் தொடர்பு கொண்டுள்ளனர். சம்பந்தமே இல்லாமல் சிவா குடும்பத்தினரிடம் இருந்து நீதிமோகன் செல்லுக்கு அழைப்பு வந்ததால் சந்தேகமடைந்த கடத்தல்காரர்கள் லவுட் ஸ்பீக்கரில் போட்டு பேசும்படி அவரிடம் கூறியுள்ளனர்.

அதன்படி நீதிமோகனும் பேச, எதிர்முனையில் பேசியது காவல்துறையினர் என்பதை கடத்தல்காரர்கள் அறிந்துகொண்டனர். இதனால் பயந்து போன கடத்தல்காரர்கள் தாங்கள் தஞ்சாவூரில் இருப்பதாகவும், நீதிமோகனை தாங்களே கொண்டு வந்து கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் விட்டுவிடுவதாகவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். கூறியபடியே வாக்குத்தவறாமல் சாக்கோட்டையில் நீதிமோகனை கொண்டு வந்து விட்ட கடத்தல்காரர்கள், அதனை காவல்துறையினரிடம் தெரிவித்துவிட்டு தப்பிவிட்டனர். கடத்தல் தொடர்பாக 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com