செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம், ஓலைகுடா, சங்குமால், லைட் ஹவுஸ், மற்றும் பாம்பன் தெற்கு வாடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் திடீரென வழக்கத்துக்கு மாறாக சுமார் 200 முதல் 400 மீ தூரம் வரை உள்வாங்கியுள்ளது. இதனால் கரையோர மீனவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டியது. இதனால் அப்பகுதியில் அரிய வகை பவளப் பாறைகள், கடல் பாசி வகைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியில் தெரிந்தன.
கடந்த மூன்று நாட்களாக ராமேஸ்வரம் பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லாத நிலையில் மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றதால் இழப்புகளை தவிர்த்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுனாமிக்கு பின்பு குறிப்பாக தனுஷ்கோடி, மண்டபம் பாம்பன் ராமேஸ்வரம் தெற்குவாடி குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் கடல் உள்வாங்குவதும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதும், நீரோட்டம் மாறுவதும் அடிக்கடி நிகழ்வதால், பாரம்பரிய மீனவர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
மீனவர்களின் அச்சத்தையும் கரையோரங்களில் வசித்துவரும் குடியிருப்பு வாசிகளின் அச்சத்தையும் போக்க கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றுடன் நான்காவது நாளாக. நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்துள்ள நிலையில், இயல்பு நிலைக்கு திரும்பினால் மட்டுமே மீன் பிடிக்கச் செல்ல முடியும் என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.