செய்தியாளர்: பே. சுடலைமணி செல்வன்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள்.
இந்நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி போன்ற கனத்த நாளில் கடல் உள்வாங்கும். சில நேரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் கடற்கரையை தாண்டி வெளியே அலையடிக்கும்.
இந்நிலையில் இன்று காலை முதலே திருச்செந்தூர் மற்றும் கடல் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து திடீரென திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே உள்ள நாழி கிணறு பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை உள்ள கடற்கரையில் சுமார் 100 தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.
கடல் உள்வாங்கியதால் கடலில் உள்ள பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் இதில் அமர்ந்து கடலில் குளித்து மகிழ்ந்தனர். சிலர் இந்த பாறைகள் மேல் ஏறி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கடல் உள்வாங்கியதால் அங்கு சிறிய பரபரப்பு நிலவியது.