”அப்பவே சொன்னாங்க.. இந்தா அறிவிச்சிட்டாங்க” - திடீர் மாற்றம்.. தருமபுரியில் சௌமியா அன்புமணி போட்டி!

தருமபுரி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டு சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணிpt web
Published on

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. முதல்கட்டமாக தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இங்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. பெரும்பாலும் கூட்டணிகளின் தொகுதிப்பங்கீடுகள் முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். பிரச்சாரமும் களைகட்டி வருகின்றது.

 பாமக
பாமகமுகநூல்

இந்த நிலையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, அதற்கான வேட்பாளர் பட்டியலையும் பாமக இன்று அறிவித்தது.

  • திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா

  • அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு,

  • ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்

  • கடலூர் - தங்கர் பச்சான்,

  • மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்

  • கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்,

  • தருமபுரி - அரசாங்கம்

  • சேலம் - ந. அண்ணாதுரை

  • விழுப்புரம் - முரளி சங்கர்

இன்னும் ஒரு தொகுதியான காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

ஆனால், கடலூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கர் பச்சான் தான் போட்டியிடவில்லை என அறிவித்ததாக பொய்யான செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், பொய்செய்தியை வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது பாமக வேட்பாளர் பட்டியல் தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தருமபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அரசாங்கம் என்பவருக்கு பதிலாக பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடவுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி P.hd., போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக Vs அதிமுக Vs பாமக - களைகட்டு ம்மும்முனை போட்டி!

கடந்த தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் கிட்டதட்ட 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்குமார் அபார வெற்றி பெற்றார். இந்த முறை செந்தில்குமாருக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவருக்கு பதில் வழக்கறிஞர் ஆ.மணி என்பவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 1987-ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வரும் இவர், 2016 முதல் 2019 வரை தருமபுரி மாவட்ட திமுக-வில் வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். 2020 முதல் 2022 வரை மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராக பணியாற்றினார். 2023 முதல் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக-வில் துணைச் செயலாளராக இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு, வெற்றிவாய்ப்பை இழந்தவர்.

அதிமுக சார்பில் டாக்டர் அசோகன் என்பவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் தருமபுரி நகரச் செயலாளர் பூக்கடை ரவியின் மகன் ஆவர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி நிறுத்தப்படுவார் என ஏற்கனவே தகவல்கள் கசிந்தது. ஆனால், வேட்பாளர் பட்டியல் வெளியான போது அவர் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது அவர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி-யுமான எம்.கிருஷ்ணசாமியின் மகள் தான் சௌமியா அன்புமணி. பாமக வலுவாக உள்ள தருமபுரி தொகுதியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த மக்களவை தேர்தலில் அன்புமணி தோல்வியை தழுவிய போதும் 5 லட்சத்திற்கும் அதிகமாக வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், தருமபுரி தொகுதியில் மும்முனை போட்டி என்பது உறுதியாகிவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com