மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக கீழ்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை புற்றுநோயியல் அறுவை சிகிச்சை துறை தலைவரும் பேராசிரியருமான சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டிருப்பது பெண்களை அவமதிப்பதில்லையா என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கடோச் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே போல கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவமனை துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷயன் மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோயியல் அறுவைசிகிச்சைப் பிரிவு மருத்துவர் சுப்பையா சண்முகம் ஆகியோர் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக மருத்துவர் சுப்பையா கார் நிறுத்துவது தொடர்பாக, தனது வீட்டின் அருகில் வசித்து வந்த பெண் ஒருவருடன் தகராறில் ஏற்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்ததோடு மட்டுமல்லாமல் பயன்படுத்திய முக கவசங்களை விட்டுச்சென்றதாக புகார் எழுந்தது. இந்தப் பிரச்னை பூதாகாரமாக வெடித்த நிலையில், இரு தரப்பு பேச்சு வார்த்தையின் கீழ் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தப் பிரச்னையை நினைவு கூர்ந்து “பெண்ணை துன்புறுத்திய குற்றச் சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம்: இது பெண்களை அவமதிப்பதில்லையா? என்று ட்விட் செய்துள்ளார்.