நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தை விற்பனை கும்பல் பிடிபட்டதை அடுத்து குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
பச்சிளம் குழந்தை விற்பனை தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு முறைகேடாக பிறப்புச் சான்றிதழும் பெற்று தரப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து ராசிபுரம் மற்றும் கொல்லிமலை சுற்றுவட்டாரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆராயும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
12 குழுக்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. கொல்லிமலை சுற்று வட்டாரத்தில் பிறப்புச் சான்றிதழ் பெறப்பட்ட 20 குழந்தைகள் மாயமான அதிர்ச்சி தகவல் ஆய்வு மூலம் தெரியவந்தது. பெற்றோரிடம் பிறப்புச் சான்றிதழ் மட்டுமே உள்ளது, அதற்குரிய குழந்தைகள் இல்லை என்றும் 20 குழந்தைகளும் விற்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
பச்சிளம் குழந்தை விற்பனை கும்பல் நாமக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் பரவியிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆராய சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.